பட மூலாதாரம், BBC Tamil
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு (பிஎச்.டி) படித்து வரும் பாரதிதாசன் என்ற மாணவர், தன்னுடைய இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித்தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி காணொளி வெளியிட்டுள்ளார்.
ஆனால், அந்த மாணவர் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று தமிழக அரசின் சமூகநீதித்துறை குற்றம்சாட்டியது. அதை மீண்டும் மறுத்து காணொளி வெளியிட்ட பாரதிதாசன், அனைத்து ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பித்துவிட்டதாகக் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளானது. அந்த மாணவனுக்கு அரசு உதவாவிடில் திமுக உதவும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த மாணவருக்கு அனைத்து உதவித்தொகையும் 2 நாட்களில் வழங்கப்படுமென்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார். அவர் தாங்கள் கோரிய சில ஆவணங்களை அனுப்பாததே உதவித்தொகை அனுப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்று ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் செந்தில்ராஜ் பிபிசியிடம் கூறினார்.
இந்த விவகாரத்தில் நடந்த விஷயங்களை பிபிசியிடம் விளக்கிய மாணவர் பாரதிதாசன், அமைச்சர் கூறியபடி உதவித்தொகை கிடைக்குமென்று நம்புவதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஐந்தாண்டுகளில் 385 மாணவர்கள்; ஒரே ஆண்டில் 365 பேர் பயன்!
தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படும் ஆதி திராவிடர் நலத்துறையால் ஆதி திராவிடர், பழங்குடியினர் போன்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கு உதவும் வகையில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை என்ற திட்டம், கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, ஓராண்டுக்கு அதிகபட்சமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.36 லட்சம் அல்லது உண்மையான செலவுத்தொகை இதில் எது குறைவோ அதை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
கல்விக்கட்டணம் தமிழ்நாடு அரசால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது. மாணவரின் வாழ்க்கைச் செலவுகள், விசா விண்ணப்பக் கட்டணம், மருத்துவக் காப்பீடு, சிக்கன வகுப்பு (economy-class) விமானக் கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் ஆகியவற்றிற்கான நிதியுதவி சம்பந்தப்பட்ட மாணவருக்கு தமிழக அரசால் நேரடியாக வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை பகிர்ந்த தகவலின்படி, கடந்த ஐந்தாண்டுகளில், பிரிட்டனில் பயின்ற 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட, பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்காக 385 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்துள்ளது. இந்த ஆண்டில் இத்திட்டத்தில் பயன்பெற 437 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் சேரும் வாய்ப்புப் பெற்ற 316 மாணவர்கள் உட்பட 375 பேர் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டு 365 பேருக்கு நிதியுதவிக்கான கடிதங்கள் (Sponsorship Letters) வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த பாரதிதாசன் ராமன் என்ற மாணவர், தற்போது மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிப்படிப்பை (பிஎச்.டி) தொடர்ந்து வருகிறார். வயதாகும்போது மனித மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாரதிதாசன் வெளியிட்ட ஒரு காணொளியில், தனக்கு இரண்டாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை இன்னும் தமிழக அரசிடமிருந்து கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பிபிசி தமிழிடம் அப்போது பேசிய பாரதிதாசன், ”இத்திட்டத்தில் என்னுடன் தேர்வான 236 மாணவர்களில் நான் மட்டுமே ஆராய்ச்சி (பிஎச்.டி) மாணவன். கடந்த ஆண்டில் என் ஆராய்ச்சிப்படிப்புக்கான முழுத்தொகை ரூ.35 லட்சம் எனக்குக் கிடைத்தது. இப்போது 5 மாதங்களாகியும் ஒரு தொகையும் வரவில்லை. தமிழக அரசின் அதிகாரிகள் பலருக்கும் 12 மின்னஞ்சல்கள் அனுப்பியும் எதற்கும் பதில் வரவில்லை. ” என்று கூறியிருந்தார்.
மேலும் ”சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசையும் என் குடும்பத்தினர் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இதுவரை உதவித்தொகை வராதால் பெரும் சிரமத்தில் இருக்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனையில் பேச எனக்கு அழைப்பும் வந்துள்ளது. அங்கு செல்ல முடியுமா என்பதும் சந்தேகமாகவுள்ளது. ” என்றும் அப்போது அவர் தகவல் பகிர்ந்திருந்தார்.
இதுபற்றி அமைச்சர் வன்னி அரசு தரப்பில் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது, அந்த மாணவர் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ரசீது ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதே கருத்தை சட்டப்பேரவையிலும் தெரிவித்த அமைச்சர் வன்னி அரசு , அந்த மாணவரின் குற்றச்சாட்டை மறுத்தார்.
அத்துடன் சமூகநீதித்துறையின் சார்பில் ஒரு விளக்க அறிக்கையும் பிபிசியிடம் பகிரப்பட்டது.
அதில் அந்த மாணவருக்கு மூன்றாண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வீதமாக கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு 2025 ஜனவரி 9 அன்று பரிந்துரைக்கடிதம் வழங்கிய விவரங்களுடன், முதலாம் ஆண்டில் கல்விக்கட்டணம் ரூ.5 லட்சம், வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாக (Living & other Expenses) ரூ.31.00 லட்சம் என ரூ.36 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் முதலாம் ஆண்டுக்கான உரிய செலவினங்களுக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தியும் 10 மாதங்களாகியும் சமர்ப்பிக்காமல், இரண்டாம் ஆண்டிற்கான உதவித்தொகை ரூ.36 லட்சம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மாணவரின் 2-ஆம் ஆண்டு பிஎச்டி. படிப்புக்கு அவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய முழு கல்விக் கட்டணம் ரூ.5.57 இலட்சம் மற்றும் மாணவருக்கு வாழ்க்கைச் செலவினமாக ரூ.6.65 இலட்சம், ஆக மொத்தம் ரூ.12.00 இலட்சம் அரசால் விடுவிக்கப்பட்டதாகக் கூறி தேதி வாரியாக பட்டியலிடப்பட்டிருந்தது.
மொத்தத்தில் இரு ஆண்டுகளில் ரூ.48,22,097 தொகை மாணவருக்கு விடுவிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் ஊடகங்கள் மூலம் தவறான தகவலைப் பரப்புவதாக துறை குற்றம்சாட்டியது.
அதன்பின்பு அந்த விவகாரம் மறக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டெம்பர் 16 அன்று, மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.
கண்ணீருடன் மாணவர் வெளியிட்ட காணொளியால் தமிழக அரசியலில் விவாதம்
அதில் பேசியிருந்த பாரதிதாசன், ”கடந்த முறை நான் காணொளி வெளியிட்டதும் சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு அதை மறுத்தார். ஆனால் நான் சொன்னது உண்மையென்று கூறி ஆதார ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டேன். அன்றிரவு எனக்கு சமூகநீதித்துறையிடமிருந்து சில விவரங்கள் கோரி மின்னஞ்சல் வந்தது. அதையும் நான் அனுப்பிவிட்டேன். இப்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறேன்.” என்றும் பேசியிருந்தார்.
அக்டோபர் முதல் வாரத்தில் எய்ம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க தனக்கு அழைப்பு வந்தும் நிதியில்லாத காரணத்தால் போக முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த 6 மாதங்களாக தன்னுடைய ஆராய்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதில் பேசிய பாரதிதாசன், தன்னைக் குறி வைத்து ஒடுக்க நினைப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
”நான் ஆராய்ச்சிக்காகத்தான் நிதி வாங்கினேனா என்று கேட்டு என்னுடைய நம்பகத்தன்மை, ஆராய்ச்சி எல்லாவற்றையும் பாழ்படுத்திவிட்டீர்கள். என்னுடைய பேராசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைத்து விட்டீர்கள். என்னுடைய கிராமத்தில் என் குடும்பத்தில் முதல் மருத்துவ ஆராய்ச்சி மாணவன் நான்தான். முடியாது என்று சொல்லிவிட்டால் நான் வேறு எங்காவது முயற்சி செய்கிறேன். ஆனால் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்காதீர்கள். வரலாற்றில் ரோகித் வெமுலாவுக்கு அன்று அந்த அமைச்சரவை என்ன செய்ததோ அதேதான் இந்த அமைச்சரவையிலும் எனக்கு நடக்கிறது என்பதை குற்றச்சாட்டாகவே வைக்கிறேன்.” என்று விரக்தியுடன் கண்ணீர் மல்க அந்த காணொளியில் பேசியிருந்தார் மாணவர் பாரதிதாசன்.
இந்த காணொளி வேகமாக சமூக ஊடகங்களில் பரவி, தமிழக அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. திமுக, நாம் தமிழர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசைக் கண்டனம் செய்திருந்தன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பதிவில், ”இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவியில்லை, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது. ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். அந்தத் தொகையை அரசு வழங்காவிட்டால் திமுகவும் மக்களும் வழங்குவர்.” என்று தெரிவித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் சமூக ஊடகங்களிலும் மாணவர் பாரதிதாசனின் காணொளி பகிரப்பட்டு, அது தொடர்பாக தமிழக அரசின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சமூகநலத்துறையின் சார்பில் மீண்டும் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே கடந்த மாதத்தில் பிபிசி தமிழிடம் பகிரப்பட்ட அந்த விளக்கத்தில் இடம் பெற்றிருந்த அதே தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்கள் இதிலும் இடம் பெற்றிருந்தன.
அத்துடன், ”இதுவரை ரூ.48 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் விடுவிக்குமாறு மாணவர் கோரியுள்ளார். அதில் மாணவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவின பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.
மாணவர் முதலாமாண்டு படிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக சமர்பித்த ஆவணங்களில், ரூ.8,17,962-க்கான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பது குறித்தும், மாணவரால் ஆராய்ச்சி செலவினங்களுக்காக வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஆகியவை தொடர்பாக 20.08.2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், இதுவரையில் சரியான விளக்கம் மாணவரால் அளிக்கப்படவில்லை.” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மாணவர் கோரியுள்ள ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சத்துக்குரிய செலவினங்கள், அந்த மாணவரின் ஆராய்ச்சிக்குத்தான் தேவைப்படுகிறது என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு தெரிவித்து, பல்கலைக்கழகப் பதிவாளருக்கு துறை சார்பில் செப்.17-ம் தேதி அன்று மின்னஞ்சலும், மாணவருக்கு நகலும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
”பல்கலைக் கழகத்திலிருந்து பதில் கிடைக்கப் பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பே மாணவர் பாரதிதாசன் சமூக வளைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணவர்களில் பாரதிதாசனைத் தவிர வேறு எந்தவொரு மாணவரிடமிருந்தும் கல்வி உதவித் தொகை தொடர்பாக எவ்வித புகார்களும் பெறப்படவில்லை.” என்றும் துறை கூறியது.
மறுபடியும் மறுத்த மாணவர்: அமைச்சர் பேட்டியும் துறை இயக்குநரின் பதிலும்!
இந்த விளக்கம் வெளியான பின்பு, மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டார். தன் மீது சமூகநீதித்துறை மீண்டும் மீண்டும் பழி சுமத்துவதாக அதில் குறிப்பிட்ட பாரதிதாசன், ”முதலாம் ஆண்டில் நீங்கள் கொடுத்த ரூ.36 லட்சத்துக்கு நான் ரூ.37 லட்சத்துக்கான ரசீதை சமர்பித்துள்ளேன். அதன்பின் நீங்கள் கொடுத்த ஆறு மாத செலவு தொகையும் முடிந்துவிட்டது. எனது ஆய்வு பணி சார்ந்த செலவுக்கான கல்வித் தொகையை வழங்கக்கோரி அதற்கான ரசீதுகளை ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்டேன். அது இமெயிலின் ஸ்பாம் பகுதியில் இருக்கிறதா என்று சோதியுங்கள். அனைத்தையும் நான் அனுப்பியபிறகும், அனுப்பவில்லை என ஐ.டி விங் மூலமாக தவறான தகவலைப் பரப்பி எனது கனவை சிதைக்கிறீர்கள்” என்று கூறியிருந்தார்.
இவ்விரு காணொளிகளை வெளியிட்டது குறித்தும் மாணவர் பாரதிதாசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, தான் வெளியிட்ட 2 காணொளிகளிலும் குறிப்பிட்ட எல்லா விஷயங்களும் உண்மை என்றதுடன், அவருக்கும் தமிழக அரசின் சமூகநலத்துறைக்கும் நடந்த பல்வேறு தகவல் பரிமாற்றங்களையும் விரிவாக விளக்கினார். அவை சார்ந்த சில ஆவணங்களையும் பிபிசியிடம் பகிர்ந்தார்.
மேலும் பேசிய அவர், ”இதில் நான் அரசியல் எதுவும் செய்யவில்லை. என் நிலையைத்தான் அந்த காணொளியில் விளக்கியிருக்கிறேன். எனக்குப் படிக்க உதவித்தொகை வேண்டும். என்னுடைய படிப்புக்குதான் இந்தத் தொகையை வாங்கினேனா என்று கேட்பது என்னுடைய நம்பகத்தன்மையை நொறுக்குவதாகவுள்ளது. இரவெல்லாம் தூக்கமின்றி கடும் விரக்தியில் இருக்கிறேன்.” என்றார்.
இந்த நிலையில், தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, செப்டெம்பர் 18 அன்று காலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், முந்தைய ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் இத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் குறித்த சில புள்ளி விவரங்களைக் குறிப்பிட்டார்.
”கடந்த திமுக ஆட்சியின்போது அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் 609 பேர் விண்ணப்பித்து, அவர்களில் 601 மாணவர்கள் அதற்குத் தகுதி பெற்றனர். ஆனால் அவர்களில் 181 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக அரசால் ரூ.84.89 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் 437 பேர் விண்ணப்பித்ததில் 365 பேருக்கு ரூ.181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார் அமைச்சர் வன்னி அரசு.
கடந்த ஆண்டில் இந்த நிதியுதவியைப் பெற்ற 181 மாணவர்களில் பாரதிதாசனும் ஒருவர் என்று கூறிய அமைச்சர் வன்னி அரசு, தமிழ்நாட்டில் இத்தகைய மூளை திசுக்கள் குறித்த ஆராய்ச்சிப்படிப்பைப் படிப்பது அவர் மட்டுமே என்பதால் அவர் நன்கு படித்து வரவேண்டுமென்பதே தன் விருப்பம் என்றார். இதுவரை அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் குறிப்பிட்ட அவர், மீதித்தொகையும் அனுப்பப்படும் என்றார்.
”தம்பி பாரதிதாசன் போன்றவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறேன். அதனால் இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாமென்பதே என் கோரிக்கை. இதுவரை தரப்பட்ட உதவித்தொகைக்கு அவர் ஆவணங்களை அளித்துள்ளார். அவர் பயிலும் பல்கலைக்கழகத்தில் துறைரீதியாக சில விவரங்கள் கோரப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் அந்தத் தொகை அவருக்கு அனுப்பப்படும். எந்தப் பதற்றமும் வேண்டியதில்லை.” என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
அமைச்சரின் பேட்டி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாணவர் பாரதிதாசன், ”நான் மிகவும் விரக்தி அடைந்திருந்த நிலையில் பலரும் எனக்கு நம்பிக்கை அளித்தனர். இப்போது அமைச்சர் கூறியிருப்பது அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்று நினைக்கிறேன். எனக்குக் கிடைக்க வேண்டிய நிதி கிடைத்த பின்பு, நான் முறைப்படி நன்றி தெரிவிப்பேன்.” என்றார்.
இதுகுறித்து தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் செந்தில் ராஜிடம் சில கேள்விகளை பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்கு அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.
பிபிசியிடம் பேசிய ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ், ”அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இல்லை என்பதே எங்கள் தரப்பு வாதம். அவர் ஆராய்ச்சிக்காக வாங்கியுள்ளதாகக் கூறப்படும் பொருட்கள், ஆவணங்கள் குறித்து அவருடைய பேராசிரியர்கள் யாரும் சான்றளிக்கவில்லை. அது மட்டுமின்றி அவர் ஏற்கெனவே சமர்ப்பித்த முதலாம் ஆண்டுக்கான செலவினப் பட்டியலிலும் ரூ.8 லட்சத்துக்கான ரசீது ஆவணங்கள் இல்லை. இந்நிலையில் அவர் இரண்டாம் ஆண்டுக்கான தொகையை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளார்.” என்றார்.
மேலும் இதுபற்றி விளக்கிய அவர், ”இத்திட்டத்தில் 3 விதமான கட்டணங்கள் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கல்விக்கட்டணம் ரூ.5 லட்சம் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தப்பட்டுவிட்டது. வாழ்வியல் செலவுக்கான தொகை, மாணவரின் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இப்போது ஆராய்ச்சிக்கான தொகையை விடுவிக்கக் கோருகிறார். கடந்த ஆண்டில் அவருக்கே இந்த தொகையும் அனுப்பப்பட்டது. ஆனால் ஆவணம் சமர்ப்பிக்காத காரணத்தால் இந்த ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கே அனுப்பி, அதற்குரிய ரசீதைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டு, பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் வந்ததும் மீதித்தொகையும் கண்டிப்பாக அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
அம்பேத்கர் அயலக உதவித்திட்டம்: யாரெல்லாம் பயன் பெறலாம்?
தமிழகத்திலுள்ள ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதி திராவிட மாணவர்களில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, உலக நாடுகளில் உள்ள QS (Quacquarelli Symonds) தரவரிசையிலுள்ள முதல் 1000 முன்னணிப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்பு (பிஎச்.டி) படிப்பதற்கு, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு கல்விக்கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட வாழ்வியல், பயணச் செலவுகள் உட்பட அதிகபட்சமாக ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்குவதே இத்திட்டம்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருப்போருக்கு ரூ.36 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால், ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வரை மொத்த உதவித்தொகை வழங்கப்படும்.
- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையைப் பெற முடியும்.
தேவையான ஆவணங்கள்
- சேர்க்கை/ வாய்ப்புக் கடிதம் (Admission / Offer letter), சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட், நகல்,
- கல்வி நிறுவனத்தின் கியூ.எஸ் தரவரிசைக்கான சான்று, வங்கிக்கணக்கு விவரங்கள்.
- இதற்கு ஆன்லைன் முறையில் மட்டுமே (https://tnadwscholarship.in/) விண்ணப்பிக்க முடியும்.
- இதுதொடர்பாக அணுக வேண்டிய அதிகாரிகள்: ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு