• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

மாணவர் போராட்டம் வெற்றி: இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகினார்; 47 அதிகாரிகள் நீக்கம்

Byadmin

Jul 25, 2026


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுகளின் பின்னணியில், கல்வித் துறையில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் மிகப்பெரிய அரசியல் முன்னேற்றமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்ற போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதையடுத்து, கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, புதுடில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜந்தர் மந்தர் பகுதியில் சுமார் ஒரு மாத காலமாக மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர். கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்த வேண்டும், முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது இராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தனது பதவி விலகல் குறித்து சமூக வலைத்தளமான ‘X’ தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்பாக, மாணவர் இயக்கமான ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தேர்வு முறைகேடு விவகாரத்தில் இந்திய தேசியத் தேர்வு முகமை (NTA) சார்ந்த 47 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மீது குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேர்வு முறைமையில் விரிவான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் முதல் கட்டம் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனநாயக வழியில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்றிரவு வெளியிட்ட காணொளி ஒன்றின் மூலம் மாணவர்களை நேரடியாகச் சந்தித்த பிரதமர் மோடி, கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அரசு உறுதியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மாணவர் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

By admin