பட மூலாதாரம், MJ Babu
-
- எழுதியவர், ஜா.ரோஸ்லின் அனிஷா
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மூடுபனியால் சூழப்பட்ட மலைகள், வருடிச் செல்லும் குளிர் காற்று, மெல்லத் தூறும் மழை, காற்றில் கலந்து எங்கும் நிறைந்திருக்கும் தேயிலையின் மணம். மூணார் என்றாலே இவற்றில் ஏதோ ஒன்றைப் பற்றிய அழகான நினைவு நம் மனதை ஆட்கொள்ளும்.
ஆனால், இந்த மலைகளுக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும் நடுவே, ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காதல் கதை உள்ளது.
எலினோர் இசபெல்லா மே, ஹென்றி மேன்ஸ்ஃபீல்ட் நைட் ஆகியோர்தான் அந்தக் காதல் கதையின் நாயகர்கள். எலினோர் இசபெல்லா மே என்பவரின் நினைவாக மூணார் மலையில் கட்டப்பட்ட நினைவிடம், நூறு ஆண்டுகளைக் கடந்து, காதலின் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
பட மூலாதாரம், MJ Babu
எலினோர்-ஹென்றி காதல் கதை
ஹென்றி மேன்ஸ்ஃபீல்ட் நைட் மூணார் தேயிலைத் தோட்டத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அவரும் எலினோர் இசபெல்லா மே என்பவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
“பிரிட்டனை சேர்ந்த பியூஃபோர்ட் பிரபாசன் என்பவரின் இளைய மகளான எலினோர், பிரிட்டனில் இருந்து இலங்கை வழியாக தூத்துக்குடியை அடைந்து, அங்கிருந்து அவரது கணவருடன் போடி வழியாக மூணார் வந்திறங்கினார்,” என்கிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எம்.ஜே பாபு.
ஒரு நாள் எலினோரும், ஹென்றி நைட்டும் பழைய மூணாறில் உள்ள மலை உச்சிக்குச் சென்றபோது, மூணாறின் அழகில் மயங்கிய எலினோர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், என்னை இந்த மலையில் அடக்கம் செய்யுங்கள். என்னை பிரிட்டனுக்கு கொண்டு செல்லக் கூடாது’ எனக் கூறியதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அவரது விருப்பம் வெகு சீக்கிரம் நிறைவேறப் போகிறது என்பது எலினோருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
“அப்போது மூணார் தோட்டப் பகுதிகளில் காலராவும் வாந்தி பேதியும் பரவலாக இருந்தன. காலராவால் பாதிக்கப்பட்ட எலினோர், 1894ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உயிரிழந்தார். அப்போது எலினோருக்கு 24 வயது மட்டுமே ஆகியிருந்தது. ஆறாத துயரத்துடனும் மாறாத அன்புடனும் இருந்த ஹென்றி தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றினார்.
சில நாட்களுக்கு முன்பு அவர்கள் நின்றிருந்த அதே இடத்தில், எலினோருக்காக கல்லறை அமைத்தார் ஹென்றி. கிறிஸ்துமஸுக்கு சற்று முன், எலினோரின் உடல் அந்த மலையின் உச்சியில் அடக்கம் செய்யப்பட்டு, அங்கு கல்லறை எழுப்பப்பட்டது. மூணாறில் வெளிநாட்டவருக்காக அமைக்கப்பட்ட ஆரம்பக்கால கல்லறைகளில் இதுவும் ஒன்று” என்று கூறுகிறார் எம்.ஜே பாபு.
இதற்காக பிரிட்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட விலையுயர்ந்த பளிங்குக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. எலினோருக்காக எழுப்பப்பட்ட கல்லறையை, பழைய மூணாறில் உள்ள சி.எஸ்.ஐ (CSI) தேவாலயத்திற்கு அருகில் இன்றும் காண முடிகிறது.
பட மூலாதாரம், MJ Babu
‘தோட்ட சமூகத்திற்கு ஒரு மயான இடமாக நன்கொடையாக அளித்தார்’
“மூணார் கிறிஸ்து தேவாலயத்தின் வரலாறு, அதனுடன் இணைக்கப்பட்ட எலினோர் கல்லறையின் வரலாற்றில் இருந்து தொடங்குகிறது. ஏனெனில் தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பே அங்கு கல்லறை எழுப்பப்பட்டது,” என ‘மூணார் வரலாறு – சிறப்பம்சங்கள்’ எனும் தனது நூலில் எம்.ஜே பாபு குறிப்பிட்டுள்ளார்.
ஹென்றி நைட்டின் மனைவி எலினோர், 1894ஆம் ஆண்டில் அங்கு அடக்கம் செய்யப்பட்ட பிறகு, “தனது அன்பிற்குரிய மனைவியின் மறைவுக்குப் பிறகு, ஹென்றி நைட் அந்த நிலத்தைத் தோட்ட சமூகத்திற்கு ஒரு மயான இடமாக நன்கொடையாக அளித்தார்” என்று பேராசிரியர் முனைவர் செபாஸ்டியன் கூறுகிறார்.
இவர் கோட்டயத்தில் உள்ள டிராப்பிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகலாஜிக்கல் சயின்சஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் வரலாறு மற்றும் மானுடயுக ஆய்வுகள் துறைத் தலைவராகப் பணிபுரிகிறார்.
பட மூலாதாரம், MJ Babu
“இந்த சி.எஸ்.ஐ தேவாலயத்திற்கு 1910 மார்ச் 11 அன்று ஏ.கே முய்ர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. திருவிதாங்கூர் மற்றும் கொச்சியின் மூன்றாவது பிஷப்பான சார்லஸ் ஹோப் கில் டி.டி அவர்களால் 1911 ஏப்ரல் 16 ஈஸ்டர் நாளன்று அர்ப்பணிக்கப்பட்டது. அங்குள்ள கல்லறைப் பதிவேடு எலினோர் நைட் அடக்கம் செய்யப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. 1929 ஏப்ரல் வரை மொத்தம் 27 பேர் அங்கு அடக்கம் செய்யப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தக் கல்லறை, தெற்காசியாவில் உள்ள கல்லறைகளுக்கான பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் சிமெட்ரிஸ் இன் சௌத் ஏசியா (British Association for Cemeteries in South Asia) வெளியிட்ட இன்டர்நேஷனல் டிரெக்டரி ஆஃப் சிமெட்ரிஸ் (International Directory of Cemeteries) பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பட மூலாதாரம், C. S. I. Church, Pallikunnu
மூணாறில் தேயிலை தோட்டங்கள் உருவான வரலாறு
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த இடுக்கி மாவட்டத்தின் மூணார் பகுதி, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலைத் தோட்டங்களுக்கான முக்கியப் பகுதியாக மாறியது” என்று ‘ஹிஸ்டரி ஆப்ஃ மாடர்ன் கேரளா – ப்ராப்ளம்ஸ் அண்ட் பெர்ஸ்ப்பெக்டிவ்ஸ்’ என்ற தனது கட்டுரையில் பேராசிரியர் ஷுமைஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சூழலில் தேயிலை நிறுவனத்தின் மேலாளராகப் பணியில் இணைந்தவர்தான் ஹென்றி மேன்ஸ்ஃபீல்ட் நைட்.
பட மூலாதாரம், Fr. Augustian Vairamon,Munnar
“திருவிதாங்கூர் மன்னரிடம் உரையாடும் அளவுக்கு மேலாளர்களுக்கு அதிகார பலம் இருந்தது. ஆளுநர் போன்ற அதிகார அமைப்பிடம் அவர்களுக்குத் தொடர்பு இருந்தது. மேலாளர்கள் ‘பெரிய துரை’ என்று அழைக்கப்பட்டனர்” என எர்ணாகுளம் மார்தோமா மகளிர் கல்லூரியில் பணிபுரியும் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரான முனைவர். ஜிஜோ ஜெயராஜ் விவரிக்கிறார்.
“ஹென்றியும் அப்படி செல்வாக்கு நிறைந்த மேலாளராக செயல்பட்டார்” என்று கூறும் எம்.ஜே பாபு, “எலினோரின் மரணத்திற்குப் பிறகு, ஹென்றி மூணாறில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஹென்றி தினமும் வேலை முடிந்ததும் எலினோரின் கல்லறைக்குச் செல்வது வழக்கம். பல நாட்கள், அவரது சக ஊழியர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை ஹென்றி எலினோரின் கல்லறையில் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார். பின்னர் ஹென்றி பிரிட்டனுக்குத் திரும்பி அங்கேயே உயிரிழந்துவிட்டார்” என குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Amita Baig and William Handerson
தேயிலை தோட்ட உருவாக்கத்தில் பெண்களின் பங்கு
“தோட்டத் தொழில், முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த, கண்ணன் தேவன் மலைகள் என்று பரவலாக அறியப்பட்ட மூணாறின் மலைப் பகுதிகளின் நிலப்பரப்பிலும், சமூகப் பண்பாட்டுச் சூழலிலும் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது.”
“தோட்ட உரிமையாளர்கள் இங்கு வந்தபோது, அடர்ந்த காடுகள், வனவிலங்குகள், முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்ட உள்ளூர் மக்கள் எனப் பல கடுமையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது” என ‘ஃபீமேல் பிளண்டர்ஸ் அண்ட் யூரோப்பியன் சோசியலைசேஷன்: எக்ஸாம்பிள் ஃப்ரம் கண்ணன் தேவன் ஹில்ஸ், சவுத் இந்தியா’ (Female Planters and European Socialization: An Example From Kannan Devan Hills, South India) என்ற ஆய்வுக்கட்டுரையில் பேராசிரியர் செபாஸ்டியன் மற்றும் பேராசிரியர் ஜிஜோ ஜெயராஜ் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
பட மூலாதாரம், Amita Baig and William Handerson
இந்தச் சூழலில், தோட்ட உரிமையாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் மனரீதியாக ஆரோக்கியமாக வைத்திருக்க, அவர்களைச் சமூக மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டியிருந்தது.
இதனால், அங்கு நிர்வாகப் பணிகளில் இருந்த பிரிட்டிஷ் மேலாளர்கள் வேட்டைக்குச் செல்லுதல், குதிரை சவாரி போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டனர்.
“பல பிரிட்டிஷ் மேலாளர்கள் தங்களது குடும்பத்தை பிரிட்டனில் இருந்து அழைத்து வந்தனர். எலினோரும் திருமணம் முடிந்த பின் ஹென்றியோடு மூணாறு வந்தடைந்தார்.
வேட்டையாடுவது ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது. ஹென்றியும் அதில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தார். குதிரை சவாரி செல்வது, நடை பயணம் மேற்கொள்வது என எலினோரும் ஹென்றியும் தங்களது மாலை நேரங்களை மூணாறு மலையில் கழிப்பார்கள்” என்கிறார் எம்.ஜே பாபு.
பட மூலாதாரம், Jijo jeyaraj
பட மூலாதாரம், S. G. Speer, UPASI
“தோட்டத் தொழிலின் விரிவாக்கத்தில் பெண்கள் மிக முக்கியமான பங்கை வகித்தனர். தோட்டச் சாகுபடி மற்றும் சாகுபடி அல்லாத தொழில்களில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் செயல்பட்டனர்.
சமூக முன்னேற்றத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பெண்கள், மூணார் மலைப்பகுதியில் ஒரு ஐரோப்பியமயமாக்கப்பட்ட சூழலை உருவாக்கினர். ஐரோப்பியத் தாக்கம் கொண்ட பாலினக் கருத்துகள் (Europeanized gendered notions) அங்கு தெளிவாகப் புலப்பட்டன” என்கிறார் பேராசிரியர். முனைவர் செபாஸ்டியன்.
அந்த ஐரோப்பியமயமாக்கப்பட்ட சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எலினோரின் வாழ்க்கையையும் பார்க்க முடியும்.
“ஹென்றியுடன் மலையில் நேரத்தைச் செலவிடுவது எலினோரின் வழக்கம். அதே போல் எலினோர் அடிக்கடி மூணாறு மலைப்பகுதியில் மாலை நேரங்களில் குதிரை சவாரி செல்வார். இவை அனைத்தும் அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் தன்னை இங்கேயே அடக்கம் செய்ய வேண்டுமென அவர் கூறியிருக்கலாம்” என்கிறார் எம்.ஜே. பாபு.
பட மூலாதாரம், MJ Babu
கோதிக் பாணியில் கட்டப்பட்ட சி.எஸ்.ஐ தேவாலயம்
பழைய மூணாறுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய குன்றின் மீது கட்டப்பட்ட பிரிட்டிஷ் கால தேவாலயமாக சி.எஸ்.ஐ தேவயாலயம் அமைந்துள்ளது.
தேவாலயத்தின் உள்ளிருந்து பார்க்கும் போது, அது சிலுவை வடிவில் காட்சி தருகிறது.
கோதிக் பாணியில், கருங்கற்களைக் கொண்டு இந்த தேவயாலயம் கட்டப்பட்டுள்ளது.
அதனைக் குறித்துப் பேசிய பத்திரிகையாளர் கே.ஏ ஷாஜி, “மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட தேவாலயம் இது” என்கிறார்.
“அழகியல் தன்மை வாய்ந்த சி.எஸ்.ஐ தேவாலயத்தின் பக்கவாட்டுகளில் உள்ள வண்ணக் கண்ணாடிகள், புனிதர்களையும் விவிலியக் கதாபாத்திரங்களையும் சித்தரிக்கின்றன. அங்கு , முக்கியத் தோட்டக்காரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பல பித்தளைத் தகடுகளும் காணப்படுகின்றன.
பட மூலாதாரம், MJ Babu
தேவாலயத்தின் உள்ளே இருக்கும் மரச்சாமான்கள், மணி, கடிகாரம், பியானோ, கண்ணாடிகள் போன்றவை லண்டனிலிருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டவை.
பலிபீடத்தின் இருபுறமும் புனித தோமா மற்றும் புனித யாக்கோபு ஆகியோரின் உருவங்களும், நடுவில் நல்ல ஆயனின் உருவமும் உள்ளன”என்றும் ஷாஜி குறிப்பிடுகிறார்.
“மூணாறில் உள்ள மிகப்பழமையான தேவாலயங்களில் இதுவும் ஒன்று. உள்ளூர் மக்களுக்கு பெரும்பாலும் அதன் வரலாறு தெரியும். ஒவ்வொரு ஆண்டும், எலினோர் இறந்த நாளில், அவர் இந்த தேவாலயத்துக்கு வருகை தருவார் என ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது” என்கிறார் மூணாறில் வசிக்கும் அபிராமி.
ஆனால், “அது உண்மையல்ல. வெறும் கட்டுக்கதை மட்டும் தான்” எனக் கூறுகிறார் எழுத்தாளர் எம்.ஜே பாபு.
பட மூலாதாரம், MJ Babu
மூணாறில் உறைந்து கிடைக்கும் வரலாறு
“எலினோரின் கல்லறை, சி.எஸ்.ஐ தேவாலயம், டாப் ஸ்டேஷன் ரயில்வே, நூறாண்டுகள் பழமையான தபால் நிலையம், காலனித்துவ காலத்தை நினைவூட்டும் கட்டிடங்கள் என மூணாறு ஒரு வரலாற்று அருங்காட்சியகமாகவே திகழ்கிறது” என்று விவரிக்கிறார் கே.ஏ ஷாஜி.
ஒரு காலத்தில் தங்களது வாழ்க்கையையும், சமூகத்தையும் இம்மலையில் உருவாக்கிய ஐரோப்பியர்களின் வரலாறு, இன்று அந்த நிலப்பரப்போடும் கட்டிடங்களோடும் பின்னிப் பிணைந்து, அதன் மூடுபனி போர்த்திய சாலைகளில் உறைந்து கிடைக்கிறது.
அவற்றில், நூற்றாண்டைக் கடந்தும் மூணாறு மலையில் நிலைத்திருக்கும் எலினோரின் கல்லறை, ஒரு தனிப்பட்ட காதல் கதையின் நினைவுச்சின்னமாக மட்டுமல்லாமல், மூணாறின் காலனித்துவ வரலாற்றின் ஒரு பகுதியாகவும் காட்சி தருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு