பட மூலாதாரம், Hector Vivas – FIFA/FIFA via Getty Images
-
- எழுதியவர், பில் மெக்நல்டி
- பதவி, நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தின் தலைமை கால்பந்து செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்ததும், ஸ்பெயினின் இளம் வீரரான லமின் யாமல் கண்ணீர் மல்கிய லியோனல் மெஸ்ஸியை கட்டியணைத்த தருணம், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையிடம் பொறுப்பு மாறுவதை உணர்த்தும் ஒரு அடையாளப்பூர்வ நிகழ்வாக உணரப்பட்டது.
39 வயதான மெஸ்ஸி, நியூயார்க்–நியூ ஜெர்சி மைதானத்தை நிரப்பியிருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் தனது பெயரை முழக்கமிட்ட போது, அவர்களை நீண்ட நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்.
இது உலகக் கோப்பை போட்டியில் அவர் விளையாடும் கடைசி தருணமாக இருக்கக்கூடும்.
அப்போது, உலகமே பார்த்துக் கொண்டிருக்க, ஆர்ஜென்டினாவின் ஆதர்ச நாயகனான மெஸ்ஸிக்கு லமின் யாமல் ஆறுதல் கூறினார்.
பின்னர் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டனர்.
பார்சிலோனாவின் தற்போதைய நம்பர் 10 வீரர், அந்தக் கிளப்பின் மிகச் சிறந்த நம்பர் 10-ஐ கட்டியணைத்த தருணம் அது.
2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஒரு தொண்டு நிறுவனத்தின் காலண்டருக்காக நடத்தப்பட்ட புகைப்படப் படப்பிடிப்பில், 20 வயதான மெஸ்ஸி, ஆறு மாத குழந்தையாக இருந்த லமின் யாமலை குளிப்பாட்டும் புகைப்படம், இந்தப் போட்டிக்கு முன்பு மீண்டும் வைரலானது.
அப்போது குழந்தையாக இருந்த லமின் யாமல் இன்று இளைஞனாக வளர்ந்திருக்கிறார். அதேநேரத்தில், மெஸ்ஸி தனது உலகக் கோப்பை பயணத்தின் நிறைவை எட்டியிருக்கலாம்.
மெஸ்ஸியை விட இருபது ஆண்டுகள் இளையவரான லமின் யாமல், தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் தொடக்க நிலையில் இருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் யூரோ கோப்பையை வென்றபோது, உலகளவில் கவனம் பெற்ற லமின் யாமல், இப்போது உலகக் கோப்பையையும் வென்று சர்வதேச கால்பந்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
பார்சிலோனாவின் தயாரிப்பான இவர், தொடை தசைநார் காயம் என்ற சிக்கலோடு தான் இந்தத் தொடருக்குள் நுழைந்தார்.
ஆனால், தனது 19 வயது மற்றும் ஆறு நாட்களில் உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பை ஆகிய இரண்டையும் வென்ற மிக இளைய வீரர் என்ற சாதனையைப் படைத்து லமின் யாமல் இத்தொடரை நிறைவு செய்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஏமாற்றமளித்தாலும், அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, ஸ்பெயின் வீரர்கள் பின்பற்றிய ஒழுக்கமான, தூய்மையான ஆட்டமுறையால் லமின் யாமலின் தாக்கம் மேலும் வலுப்பெற்றதைக் கூறலாம்.
அதேவேளையில், ஆர்ஜென்டினா அணி பின்பற்றிய அணுகுமுறையால் மெஸ்ஸியின் ஆட்டமும் பாதிக்கப்பட்டது.
அது எந்தப் பலனையும் அளிக்கவில்லை. சொல்லப்போனால், அதற்குக் கிடைக்க வேண்டிய முடிவும் அதுதான்.
பட மூலாதாரம், Getty Images
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஸ்பெயின் அணியும், லமின் யாமலும் படிப்படியாக வளர்ச்சி கண்டனர். அதன் முடிவில், உலகமே லமின் யாமலின் காலடியில் இருப்பதுபோல், கால்பந்தின் மிகப் பெரிய இரண்டு விருதுகளும் அவரது வசமாகின.
இயல்பாகவே அபாரமான திறமை கொண்டவரான லமின் யாமல், ஸ்பெயின் அணியின் அதிர்ஷ்ட நட்சத்திரமாகவும் திகழ்கிறார்.
கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த கோலின் மூலம், சர்வதேச கால்பந்தில் ஸ்பெயின் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
லமின் யாமல் தனது நாட்டுக்காக விளையாடிய 28 போட்டிகளிலும் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை.
பிரதான தொடர்களில் அவர் தொடக்க வீரராகக் களம் கண்ட 13 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய போது, முக்கியமான தொடர்களில் 100 சதவிகிதம் வெற்றி விகிதம் பெற்ற ஒரே ஐரோப்பிய வீரர் என்ற சாதனையையும் அவர் பெற்றுள்ளார்.
1958இல் பிரேசிலின் பீலே, 1982இல் இத்தாலியின் தடுப்பு ஆட்டக்காரர் ஜூசெப்பே பெர்கோமி மற்றும் 2018இல் பிரான்சின் கிலியன் எம்பாப்பே ஆகியோருக்குப் பிறகு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தொடக்க வீரராகக் களம் இறங்கி கோப்பையை வென்ற நான்காவது மற்றும் ஐந்தாவது இளம் வயது வீரர்கள் என்ற பெருமையை லமின் யமாலும், அவரது 19 வயது ஸ்பெயின் சக வீரர் பாவ் குபார்சியும் பெற்றனர்.
போட்டி முடிந்த பிறகு, ஸ்பெயின் தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே, லமின் யாமலுக்கு தனது “மனப்பூர்வமான நன்றியை” தெரிவித்தார்.
“அவர் சிறப்பாக விளையாடினார். இந்த அனுபவம் அவரை மேலும் முதிர்ச்சியடையச் செய்து, இப்போது இருப்பதை விட இன்னும் சிறந்த கால்பந்து வீரராக மாற்றும்” என்று அவர் கூறினார்.
“அணியின் நலனுக்காக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். எனது அணிக்கு இது மிகவும் முக்கியமானது. என் பார்வையில், அவர் ஒரு சிறந்த உலகக் கோப்பைத் தொடரை விளையாடியுள்ளார்” என்றும் அவர் தெரிவித்தார்.
லமின் யாமல் ஒரு அபாரமான திறமையாளர் மட்டுமல்ல, சிறப்பான மனநிலையையும் கொண்ட வீரர்.
குறிப்பாக நிக்கோலஸ் டாக்லியாஃபிகோவுடன் தொடர்ந்து நேருக்கு நேர் மோத வேண்டி வந்தபோது, அர்ஜென்டினா வீரர்கள் அவரை அச்சுறுத்தச் செய்த தெளிவான முயற்சிகளை அவர் மிகச் சாதாரணமாகப் புறக்கணித்தார்.
முன்னாள் இங்கிலாந்து கோல்கீப்பரும், பிபிசி ஸ்போர்ட்ஸ் விமர்சகருமான ஜோ ஹார்ட் இதை மிகவும் துல்லியமாக விவரித்தார்.
“லமின் யாமல் எந்த எதிர்வினையும் காட்டவில்லை என்பது மட்டுமல்ல, அவர் அதை தைரியமாகவும் எதிர்கொண்டார். அவர் பதற்றமடையவும் இல்லை. பின்வாங்கவும் இல்லை. மொத்த ஆர்ஜென்டினா அணியும் அவரை கடுமையாகத் தடுக்க முயன்றது”.
“ஆனால், அவர் ஆட்டம் முழுவதும் நிதானமாக இருந்தார். அது உண்மையிலேயே மிகச் சிறப்பான ஆட்டம்”என்று கூறினார்.
“லமின் யாமலுக்கு 19 வயதாகிறது. அவருக்கு இது ஒரு அழகான நாள். 19 வயதிலேயே அவர் கால்பந்தில் வெல்ல வேண்டிய அனைத்தையும் வென்றுவிட்டார்” என்றும் ஜோ ஹார்ட் பாராட்டினார்.
லமின் யாமலின் கால்பந்து வாழ்க்கையின் பெரும்பகுதி அவருக்கு முன்பிருக்கும் நிலையில், அணித்தலைவரும் இந்த உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரருமான ரோட்ரி போன்ற அனுபவமிக்க சக வீரர்களின் வழிகாட்டுதலும் அவருக்கு உள்ளது.
எனவே, தனது கால்பந்து வாழ்க்கை முடிவடைவதற்கு முன்பு, இதுபோன்ற மேலும் பல வெற்றிகளை லமின் யாமல் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆர்ஜென்டினா அணுகுமுறையால் சிதைந்த மெஸ்ஸியின் கனவு
லமின் யாமலின் மகிழ்ச்சி, மெஸ்ஸியின் மனவேதனைக்கு நேர்மாறான காட்சியாக இருந்தது.
உலகக் கோப்பையில், கடைசியாக ரசிகர்களின் அன்பை பெறும் தருணம் இதுவாக இருக்கலாம் என்ற உணர்வுடன், ஆர்ஜென்டினா ரசிகர்கள் நிரம்பியிருந்த பகுதிகளை மெஸ்ஸி மனமுடைந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல முயன்ற ஆர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியிடம், இது மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை போட்டியா என்று கேட்கப்பட்டது.
டிசம்பரில் அவரது ஒப்பந்தமும் முடிவடைவதால், அவரது எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
தான் இதுகுறித்து மெஸ்ஸியுடன் பேசவில்லை என்று கூறிய ஸ்கலோனி, பின்னர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.
அதன்பிறகு செய்தியாளர் சந்திப்பை விட்டு வெளியேறினார்.
போட்டி தொடங்கிய முதல் விசிலில் இருந்தே அர்ஜென்டினா கடுமையான மோதல் பாணியை பின்பற்றியது.
இதனால், அந்த அணியின் ஊக்க சக்தியும் கேப்டனுமான மெஸ்ஸி, போட்டியின் பெரும்பாலான நேரங்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதவராகவே இருந்தார்.
ஸ்பெயினின் வெற்றி, கால்பந்துக்கே கிடைத்த வெற்றியாக இருந்தது. ஏனெனில், போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆர்ஜென்டினா கால்பந்தை விட வேறு விஷயங்களிலேயே கவனம் செலுத்தியது போல தோன்றியது.
ஸ்லோவேனிய நடுவர் சிலாவ்கோ வின்சிச் காட்டிய நெகிழ்வுத்தன்மை, இந்த உலகக் கோப்பை முழுவதும் எதிரணிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.
டானி ஒல்மோ மீது அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் செய்த மோசமான ஃபவுலுக்கு , எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்பெயின் ரசிகர்கள் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் பெயரை கிண்டலாக முழக்கமிட்டனர்.
ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாதையை அதிகாரிகள் சுலபமாக்கியதாகக் கூறும் சதி கோட்பாட்டாளர்களின் வாதத்துக்கு, இது மேலும் ஒரு ஆதாரமாக அமைந்தது.
ஆட்டம் தொடங்கி 40 நிமிடங்களுக்குப் பிறகு, ஆர்ஜென்டினா அணியின் தடுப்பாட்ட வீரர் லிசாண்ட்ரோ மார்டினெஸ், மிக்கேல் ஓயர்சபல் மீது செய்த ஃபவுலுக்காக ஆட்டத்தின் முதல் மஞ்சள் அட்டையைப் பெற்றார்.
இதற்கு, மைதானத்தில் இருந்த பலரும் கடும் கிண்டலுடன் எதிர்வினை ஆற்றினர்.
அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெளிப்படுத்திய அந்த அசாத்திய திறமை, இப்படிப்பட்ட தந்திர உத்திகளாகக் குறைக்கப்பட்டதைக் காண்பது ஒரு ஏமாற்றமளிக்கும் காட்சியாக இருந்தது.
அத்தகைய அணுகுமுறை, மெஸ்ஸியின் மேதைமையையும், திறமையையும் வெளிப்படுத்த எந்த வகையிலும் உதவவில்லை.
வாய் மீது கையை வைத்தபடி பேசிய ஸ்பெயின் வீரர் மார்க் குகுரெல்லாவுக்கு சிவப்பு அட்டை காட்டி வெளியேற்ற வேண்டும் என்று நடுவரிடம் கோரிக்கை வைத்ததன் மூலம் மெஸ்ஸியும் அதில் ஒருவராகிப் போனார்.
இந்த உலகக் கோப்பையில், மோதலைத் தூண்டும் வகையில் அவ்வாறு நடந்துகொண்டால் சிவப்பு அட்டை வழங்கப்படும்.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்வதற்குச் சற்று முன், குபார்சி மீது என்ஸோ ஃபெர்னாண்டஸ் தேவையின்றி பாய்ந்து தாக்கியது அர்ஜென்டினாவின் மோசமான ஆட்டத்தின் உச்ச கட்டமாக அமைந்தது.
செல்சீ அணியின் மிட்ஃபீல்டரான என்சோ பெர்னாண்டஸ், அந்த நேரத்தில் பந்தையே பார்க்காமல் எதிரணி வீரரை தரையில் தள்ளினார். அவருக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது மஞ்சள் கார்டு முற்றிலும் தகுதியானது தான்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், 90 நிமிடங்களில் ஒரு ஷாட் கூட அடிக்காத முதல் அணியாக அர்ஜென்டினா மாறியது.
117-வது நிமிடத்தில், நெருக்கடி அதிகரித்த நிலையில், அந்த வாய்ப்பு கிடைத்த போதும், மெஸ்ஸி இலக்கைத் தவறவிட்டார்.
இந்தப் போட்டியில், இலக்கை நோக்கி ஸ்பெயின் அணி 12 ஷாட்களை அடித்தது. ஆனால், ஆர்ஜென்டினா முழுப் போட்டியிலும் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை.
அதிர்ச்சியளித்த முதல் பாதியில், எதிரணியின் இறுதிப் பகுதியில் ஆர்ஜென்டினா கொடுத்த பாஸ்களின் எண்ணிக்கையை விட, அவர்கள் செய்த ஃபவுல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அந்தப் பகுதியில் அவர்கள் 8 பாஸ்கள் மட்டுமே கொடுத்தனர். ஆனால், 9 ஃபவுல்கள் செய்தனர். அதுவே அந்த அணியின் அணுகுமுறையை முழுமையாக வெளிப்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
இறுதி விசில் ஒலித்ததும், மெஸ்ஸியுடன் சேர்ந்து அர்ஜென்டினா வீரர்களும் கண்ணீர் சிந்தினர்.
இருப்பினும், அந்த நிகழ்வும் இரு அணிகளின் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான ஒரு கண்ணியமற்ற மோதலில் போய் முடிந்தது.
இரண்டாவது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கியதில் இருந்தே பலமுறை செய்தது போல, லியான்ட்ரோ பரேடஸ் வன்முறையாக நடந்து கொண்டு, எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்தார்.
ஸ்பெயினின் காவி (Gavi) தரையில் தள்ளிவிடப்பட்ட சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பிருந்தது.
இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்த உலகக் கோப்பை தொடர், இத்தகைய விரும்பத்தகாத இறுதிக் காட்சிக்காக நினைவுகூரப்படக் கூடாது.
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஸ்பெயின் அணி இந்த உலகக் கோப்பை முழுவதும் ஒவ்வொரு போட்டியிலும் மேம்பட்டு வந்தது.
தொடக்கப் போட்டியில் கேப் வெர்டேவிடம் டிரா செய்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, இறுதியில் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வரை ஸ்பெயின் அணி தொடர்ந்து வளர்ச்சி கண்டது.
உலகக் கோப்பைக்குத் தகுதியான வெற்றியாளர்கள் கிடைத்துவிட்டனர். லமின் யமாலின் ரூபத்தில் எதிர்காலத் தொடர்களுக்கான ஒரு நட்சத்திரமும் கிடைத்துள்ளார்.
மெஸ்ஸியின் மறக்க முடியாத உலகக் கோப்பை காலம் முடிவுக்கு வந்திருக்கலாம்.
ஆனால், லமின் யாமலின் பயணம் இன்னும் நீண்ட ஆண்டுகள் தொடரக்கூடும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு