• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

ராபர்ட் கிளைவ்: சென்னைக்கு எழுத்தராக வந்த இவர் ராணுவ வீரராகி வரலாற்றில் தடம் பதித்த கதை

Byadmin

Oct 8, 2026


ராபர்ட் கிளைவின் ஆரம்பக் கால வரலாறு

ராபர்ட் கிளைவ் பேரரசுகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைத் தனது மன உறுதி மற்றும் துணிச்சலான செயல்கள் மூலம், எடுத்துக் காட்டினார். மூத்த வில்லியம் பிட் (பின்னாள் பிரதமர்), நாடாளுமன்ற மக்களவையில் அவரை ‘ விண்ணுலகில் பிறந்த தளபதி’ என்று பாராட்டினார்.

துணிச்சலும் சாகச உணர்வும் கொண்டிருந்த கிளைவ் அதீத பேராசை கொண்டவராகவும் இருந்தார். போலி ஆவணங்களைத் தயாரிக்கவோ அல்லது பொய்யுரைக்கவோ அவர் எப்போதும் தயங்கியதில்லை. இங்கிலாந்தில் ஒரு சிறந்த ராணுவ வீரராக பார்க்கப்படுகிற அதே நேரம் இந்தியாவில் அவர் கொள்ளையராகவும் நாட்டின் செல்வங்களைச் சூறையாடியவராகவும் பார்க்கப்படுகிறார்.

ஒரு சாதாரண எழுத்தராக இருந்து ராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்று இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசுக்கான அடித்தளத்தை அமைத்த ராபர்ட் கிளைவ் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் சென்னையிலும் எட்டு ஆண்டுகள் கல்கத்தாவிலும் தலைமைப் பொறுப்பு வகித்து பிரிட்டிஷ் ராணுவத்தை வழி நடத்தியவர்.

இவ்விரு இடங்களிலும் அவர் புரிந்த சாதனைகளை தனித்தனியாக இரு கட்டுரைகளாக எழுதும் எண்ணத்தில், எழுதப்பட்டதன் முதல் பாகம் இது. இதில் சென்னை மாகாணத்தை ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்த வரலாற்றைக் காண்போம்.

கிளைவின் இளமைக் காலம்

ஆறு மகன்களும் ஏழு மகள்களும் கொண்ட ரிச்சர்ட் கிளைவ் குடும்பத்தின் மூத்த மகனாக ராபர்ட் கிளைவ் 1725ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார். இங்கிலாந்தின் ஷிராப்ஷயரில் இருந்த தனது குடும்பத்தின் சிறிய பண்ணையில் இருந்து குறைந்த வருமானமே கிடைத்ததால், தனது நிதிநிலையை ஈடுசெய்வதற்காக வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு வந்த ரிச்சர்ட் கிளைவ் ஒரு அரசியல்வாதியாக மாண்ட் கோமெரிஷயரை பிரதிநிதித்துவப்படுத்தி பல ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றினார்.

By admin