• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கு முதலாவது வெற்றி | ரட்னம் அணிக்கு தொடர்ச்சியான ஏழாவது தோல்வி

Byadmin

Sep 3, 2026


கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை (01) மாலை நடைபெற்ற ரட்னம் கழகத்துக்கு எதிரான சுப்பர் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகம் 3 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இதன் மூலம் தனது ஏழாவது முயற்சியில் நியூ யங்ஸ் கழகம் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதேவேளை, ரட்னம் கழகம் தொடர்ச்சியான ஏழாவது தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியுடன் நியூ யங்ஸ் கழகம் 5 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடைநிலையில் இருந்த இந்த இரண்டு அணிகளும் தத்தமது முதலாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இன்றைய போட்டியை எதிர்கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

போட்டி ஆரம்பித்த சூட்டோடு 3ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் வீரர் அசித் நிர்மல் குமார மிகச் சிறப்பான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

எனினும், போட்டியின் 14ஆவது நிமிடத்தில் ரட்னம் கழகம் கோல் நிலையை சமப்படுத்தியது.

ரட்னம் கழக வீரர் மொஹமத் ஷரீக் சுமார் 35 யார் தூரத்தில் இருந்து உதைத்த பந்து கோல் வாயிலில் நிலத்தில் பட்டு கோல் காப்பாளருக்கு மேலாக கோலினுள் புகுந்தது.

நிர்மல் குமார 34ஆவது நிமிடத்தில் தனது 2ஆவது கோலைப் போட்டு நியூ யங்ஸ் அணியை மீண்டும் முன்னிலையில் இட்டார்.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது அல்போன்ஸ் கிறிஸ்துராஜின் ப்றீ கிக்கைப் பயன்படுத்தி பிரான்சிஸ் சிக்கேரூபா தலையால் பந்தை முட்டி ரட்னம் சார்பாக கோல் நிலையை 2 – 2 என சமப்படுத்தினார்.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணியினரும் வெற்றிகோலைப் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால், முன்கள வீரர்களின் அசிரத்தையால் கோல் போடும் வாய்ப்புகள் வீண் போயின.

இந்தப் போட்டியில்  ரட்னம் கோல்காப்பாளர் தெய்வேந்திர மேவின்ஷான் அற்புதமாக செயற்பட்டு பல கோல்களைத் தடுத்து நிறுத்தி பெரும் பாராட்டைப் பெற்றார்.

எனினும் போட்டியின் 75ஆவது நிமிடத்தில் ரட்னம் கழக பின்களத்தில் ஏற்பட்ட தவறைப் பயன்படுத்தி பிரான்சிஸ்கோ டில்ஷான் பெர்னாண்டோ இலகுவான கோல் ஒன்றைப் போட்டார். அதுவே நியூ யங்ஸ் கழகத்தின் வெற்றி கோலாக அமைந்தது.

By admin