• Wed. May 27th, 2026

24×7 Live News

Apdin News

வைரஸ் பரவல் அபாயம் – மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு கனடா 90 நாள் பயணத் தடை!

Byadmin

May 27, 2026


எபோலா வைரஸ் பரவல் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்கள் கனடாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் இன்று முதல் அடுத்த 90 நாட்களுக்கு கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் கனடாவிற்குள் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நோய்த்தொற்று அபாயம் அதிகரித்து வருவதால், எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸின் Bundibugyo வகை தேசிய அளவிலான பெருந்தொற்றாக மாறும் அபாயம் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும் கடந்த வாரம் அமெரிக்கா தற்காலிகத் தடையை அறிவித்திருந்தது.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கனடிய குடிமக்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகள், அவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும், மே 30ஆம் தேதி முதல் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, தற்போது வரை அமெரிக்கா, கனடா மற்றும் பஹாமாஸில் ஆகிய நாடுகளில் எபோலா தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

எபோலா என்பது மிகவும் ஆபத்தான மற்றும் வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். இது உடல் திரவங்கள் மூலம் பரவுவதுடன், கடுமையான காய்ச்சல், உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தச்சிவப்பு போன்ற தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.

By admin