40
வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் திங்கள்கிழமை இரவு நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும், அமைதி காக்கவும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 40 வயது ஸ்டீபன் ஓகில்வி (Stephen Ogilvy) என்பவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது இடது கண்ணை இழந்துள்ளார் என்றும், அவரது வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“வன்முறையை நாங்கள் விரும்பவில்லை, அமைதியான போராட்டமே முன்னேற்றத்திற்கான ஒரே வழி” என்று ஸ்டீபன் ஓகில்வியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தை மக்களைப் பிரிக்கவோ அல்லது விரோதத்தைத் தூண்டவோ பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், கத்திக்குத்து நடந்தபோது துணிச்சலாகச் செயல்பட்டு ஸ்டீபனின் உயிரைக் காப்பாற்றிய உள்ளூர் மக்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பெல்பாஸ்ட்டில் பெரும் வன்முறை வெடித்தது. முகமூடி அணிந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் “வெளிநாட்டினரே வெளியேறுங்கள்” என்று முழக்கமிட்டபடி வீடுகள், கார்கள் மற்றும் ஒரு பஸ்ஸை தீயிட்டுக் கொளுத்தினர்.
கடந்த 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஓர் ஆப்பிரிக்கக் குடும்பம், தங்கள் வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டதால் வெளியேற வேண்டியிருந்தது.
ஓர் உக்ரேனியக் குடும்பம், தங்கள் வீட்டின் முன்பக்கக் கதவு தீப்பிடித்ததால் தப்பி ஓடியது.
70 வயதுடைய முதியவர் ஒருவர் வன்முறையின்போது காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி கத்திக்குத்துத் தாக்குதல் தொடர்பாக 30 வயதான ஹாடி அலோடிட் (Hadi Alodid) என்ற சூடான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2023இல் இங்கிலாந்துக்குள் நுழைந்த இவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அவர் மீது கொலை முயற்சி மற்றும் கத்தியை வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நான்கு வாரங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் மிஷெல் ஓ’நீல் ஆகியோர் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பெல்பாஸ்ட் நகரில் பாதுகாப்புக்காகக் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறைத் தலைவர் ஜான் பௌச்சர் (Jon Boutcher) எச்சரித்துள்ளார்.