12
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஈரானிய அதிகாரிகள் முற்றிலும் மறுத்துள்ளனர்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) நாட்டின் முக்கிய முடிவுகளில் அதிக செல்வாக்கு செலுத்துவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் தனது பதவியை விலக முடிவு செய்ததாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இங்கிலாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் “ஈரான் இன்டர்நேஷனல்” ஊடகம், ஜனாதிபதி பெஷெஷ்கியன் தனது ராஜினாமா கடிதத்தை ஈரானின் உச்ச தலைவரிடம் சமர்ப்பித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. மேலும், போர்க்கால மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை ஐஆர்ஜிசி தனிச்சையாக மேற்கொள்வதாகவும், இதன் காரணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தகவல்களை ஈரான் அதிகாரிகள் உடனடியாக நிராகரித்துள்ளனர். ஐஆர்ஜிசியுடன் தொடர்புடைய தஸ்நிம் செய்தி நிறுவனம், ஜனாதிபதி தனது பொறுப்புகளை வழக்கம்போல தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை துணைத் தலைவரான சையத் மெஹ்தி தபதாபாயி, இந்த செய்தியை “ஊடகங்களின் கற்பனை விளையாட்டு” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி பெஷெஷ்கியன் மக்களுக்குச் சேவை செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், நாட்டின் ஒற்றுமையை பாதிக்க முயற்சிப்பவர்களின் நோக்கம் நிறைவேறாது என்றும் அவர் சமூக வலைத்தளமான எக்ஸ் மூலம் தெரிவித்துள்ளார்.