இமாசலபிரதேச மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ளது. ஜூவாலாமுகி நகரம். இங்கே காங்ரா பள்ளத்தாக்கில் சிவாலிக் மலைத்தொடரின் மடியில் ‘காளிதர்’ என்ற பகுதியில் ஜூவாலாமுகி திருக்கோவில் இருக்கிறது. இது அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்று.
புராணத்தின்படி, தட்சனின் யாகத்தின்போது தன்னை மாய்த்துக்கொண்ட அம்பாளின் உடல் பாகங்கள் இந்தியா முழுவதும் சிதறி விழுந்தன. அதில் அன்னையின் நாக்கு விழுந்த இடம் இதுவாகும். இந்த ஆலயம், மகாபாரத பஞ்ச பாண்டவர்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் 9 தீச்சுடர்களின் காரணமாக, இந்த ஆலயம் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தில் அம்மனுக்கு சிற்பமோ, படமோ கிடையாது. எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் 9 தீபச்சுடர்களே அன்னையின் உருவமாக போற்றி வணங்கப்படுகின்றன.
இந்தக் கோவிலின் அடிப்பகுதியில் பாறைகள் இருக்கின்றன. அந்தப் பாறைகளில் உள்ள 9 துளைகளின் வழியாகத்தான் தீச்சுடர்கள் எரிகின்றன. ஒரு காலத்தில், பாறைகள் வெளியே தெரியும்படி அமைந்திருந்தன. பின்னர் தீபச்சுடரைச் சுற்றிலும் தாமிரம், வெள்ளியைக் கொண்டு சன்னிதி அமைத்தனர். சில தீபச் சுடர்களுக்கு மேல், தங்க முலாம் பூசப்பட்ட விமானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 9 தீபச்சுடர்களும் நவ துர்க்கைகளாகவும் வழிபடப்படுகின்றன. இதில் பிரதானமான சுடரை, மகா காளியாகவும், மற்றவற்றை அன்னபூரணி, சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட 8 தெய்வங்களாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஒன்பது தீபச்சுடர்களுக்கும் தினமும் 5 முறை ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது இங்கு வண்ணமயமான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆலயத்துக்கு அடியில் இருக்கும் பாறைகளுக்குள் மீத்தேன் வாயு இருப்பதாகவும், அது 9 துளைகளின் வழியே வெளியேறும்போது ஆக்சிஜனோடு கலந்து, ரசாயன மாற்றத்தால் தீச்சுடர் உண்டாவதாகவும் கூறப்படுகிறது.
1970-80-களில் இந்த ஆலயத்தைச் சுற்றிலும் சுமார் 3 ஆயிரம் மீட்டருக்கு, பள்ளம் தோண்டி அந்த இடத்தில் தீப்பற்றும் வகையிலான வாயு இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். அப்படி இருந்தால், அதை நாட்டின் பொருளாதாரத்துக்கு பயன்படுத்தலாம் என்று நினைத்தனர். ஆனால் ஆலயத்தைச் சுற்றி அப்படி எதுவும் இல்லை. எனவே ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள பாறைகளுக்குள் மட்டுமே வாயு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
பல நூறு ஆண்டுகளாக அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் இந்த தீச்சுடர்களுக்கு காரணம், அன்னையின் அற்புத சக்தியே என்று பக்தர்கள் அறுதியிட்டு நம்புகின்றனர்.