5
பிரான்ஸில் கல்வித் துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் தீவிரப் போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதலில், பாடசாலை மாணவர் ஒருவரின் கை வெடித்துச் சிதறிப் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடசாலைக் கட்டடங்களின் மோசமான நிலைமை, வகுப்பறைகளில் காணப்படும் இடநெருக்கடி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, நாடு தழுவிய ரீதியில் மாணவர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு பிரான்ஸின் லென்ஸ் நகரில் அமைந்துள்ள அகஸ்டே பெஹால் மேல்நிலைப் பாடசாலைக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை உள்ளூர் ஆளுநர் பிரான்சுவா-சேவியர் லோக் உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கலவரத் தடுப்புப் பொலிஸாரால் வீசப்பட்ட ‘ஸ்டிங்-பால்’ ரகக் கண்ணீர்ப்புகைக் கைக்குண்டை மாணவர் கையில் எடுக்க முற்பட்ட வேளையிலேயே அது வெடித்துள்ளதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மாணவர் அந்தக் கைக்குண்டைத் தொடவில்லை என்றும், பொலிஸார் வீசிய குண்டு நேரடியாக அவர் மீது மோதியே வெடித்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பிரெஞ்சு பொலிஸ் விசாரணைப் பிரிவு விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் வசதிகளைக் கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள், தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் வரை தீவிரமடைந்துள்ளதுடன் சுமார் 500 பாடசாலைகளின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்கள் ஆரம்பித்தது முதல் இதுவரை சுமார் 190 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.