7
இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் நகர மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:50 மணியளவில் ஏஞ்சல் ரோ பகுதியில் சந்தேகத்துக்கிடமான இருவரை குறித்த உத்தியோகத்தர் அணுகிய வேளையிலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக நொட்டிங்ஹாம்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது தனது பாதத்தில் ஏற்பட்ட காயத்திற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகவும் துப்பறியும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏஞ்சல் ரோ பகுதி தற்போது மூடப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான ஆபத்துக்களை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நினைவூட்டுவதாக உதவி தலைமை கான்ஸ்டபிள் கிளேயர் ருகாஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தாமதமின்றி பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.