போலந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள கிராகோவ் நகரின் முக்கிய சந்தை சதுக்கத்தில் இன்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,” இன்று மாலை சுமார் 3 மணியளவில், கார் ஒன்றில் வந்த நபர், சந்தைப் பகுதிக்குள் நுழைந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ராணுவ சீருடை போன்ற ஆடையை அணிந்திருந்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்யும் முயற்சியின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு அந்த நபரும் பதிலுக்குத் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இறுதியில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீசாரால் சுடப்பட்டு, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, காவல்துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூலம் தனக்குத் தொடர்ந்து தகவல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
போலந்து அதிபர் கரோல் நாவ்ரோக்கி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து, “பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.