தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா (Andalusia) பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரமான காட்டுத்தீயில் சிக்கி, குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் நால்வர் இங்கிலாந்து பிரஜைகள் ஆவர். அவர்கள் தீயில் கருகிய ஒரு காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பகுதியில் வசித்து வந்த வெளிநாட்டினர் என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்மேரியா (Almería) மாகாணத்தில் உள்ள லாஸ் கல்லார்டோஸ் (Los Gallardos) மற்றும் பெடார் (Bédar) ஆகிய கிராமங்களுக்கு அருகிலுள்ள காடுகளில் இந்தத் தீ பரவியுள்ளது. பெடார் கிராமத்தில் அதிகப்படியான இங்கிலாந்து மக்கள் வசித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்த 30 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அவசரக்கால பணியாளர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள விளையாட்டு அரங்குகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் நிலவும் 40°C-க்கும் அதிகமான கடும் வெப்பம் மற்றும் வறண்ட நிலப்பரப்பு தீ வேகமாகப் பரவக் காரணமாகியுள்ளது. மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், மின்சார நிறுவனம் இதனை மறுத்து, விசாரணை நடத்தி வருகிறது.
அப்பகுதியில் இருந்த மக்கள் கூறுகையில், வானம் இருண்டு புகை மண்டலமாக மாறியதாகவும், தீயானது ஒரு வெடிகுண்டு வெடித்தது போன்ற மேகக் கூட்டங்களை உருவாக்கியதாகவும் தெரிவித்தனர். பலத்த காற்று வீசத் தொடங்கினால் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று அண்டாஸ் (Antas) நகர மேயர் கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்பெயினின் வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் அதிகப்படியான தீ விபத்து அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஸ்பெயினில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஸ்பெயின் காட்டுத்தீ: இங்கிலாந்து பிரஜைகள் நால்வர் உட்பட 12 பேர் உயிரிழப்பு, 23 பேர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம் appeared first on Vanakkam London.