ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள அல்-ஷரியா என்ற நகரில் சவுதி படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.
அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனா அருகே உள்ள அல்-ஷரியா என்ற நகரத்தில் சவுதி படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.