3
* யாழ் ஆயர் நியமனம்: அரசாங்கத்துடன் பேசியது ஏன்? அரசியல் தலையீட்டை வத்திக்கான் அனுமதித்ததா?
* செம்மணியில் சிங்களவர்களும் புதைக்கப்பட்டதாக ஆயர் ஜஸ்ரின் மாநாட்டில் கூறியதன் நோக்கம் என்ன?
* உண்மையை அறிந்த பின்னர் ஆயர், கர்தினால் நியமனங்களை இரத்து செய்த வத்திக்கான்!
— —- —-
கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணைப் பேராயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், யாழ்ப்பாணத்தில் பிறந்து, சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் தனது உயர் கல்வியை நிறைவு செய்தவர் என்பதை எவரும் மறுக்க முடியாது.
அவரது உயர்கல்வித் தகைமைகள் குறித்தோ, அக்கல்விப் பின்னணியின் சிறப்புகள் பற்றியோ புதிதாக எடுத்துரைக்க வேண்டிய அவசியமுமில்லை.
இந்த இடத்தில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக உருவெடுத்திருப்பது பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் தற்போதைய யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரின் அணுகுமுறைகளும் நகர்வுகளும் மாத்திரமே.
ஏனெனில், வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள நான்கு மறைமாவட்டங்களின் ஆயர் நியமனங்கள் என்பது, வெறுமனே கத்தோலிக்க திருஅவையின் மதக் கோட்பாடுகளோடு மாத்திரம் சுருங்கிவிடுவதல்ல;
அது சைவத் தமிழ் மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளோடும் தேசிய இருப்போடும் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இங்கு பொருள்முதல்வாத நோக்கில் அவதானிக்கப்பட வேண்டும்.
இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமன விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தமிழர் விரோத அரசியல் சூழ்ச்சிகளுக்கு, ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் துணை போகிறார் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில், துணைப் பேராயர் அன்ரன் ரஞ்சித் யாழ் ஆயராக முன்னிறுத்தப்படும் நகர்வுக்கு எதிராக எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்த எதிர்ப்பானது தனிப்பட்ட ரீதியில் அன்ரன் ரஞ்சித் என்ற ஆளுமைக்கு எதிரானது அல்ல; மாறாக அதன் பின்னாலுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானது என்றே பொருள் கொள்ள முடியும்…
உண்மையைக் கூறினால், 2015ஆம் ஆண்டில் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் யாழ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்ட போதே, இதற்கான எதிர்ப்புக் குரல்கள் உள்ளுக்குள் ஒலிக்கவே செய்தன.
ஆயர் ஜஸ்ரின் “இலங்கை இராணுவத்தின் நண்பனா” என்று கேள்வி எழுப்பி நான் அப்போதே, விமர்சித்துக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன்.
எனினும், போர்க்காலச் சூழலில் அவர் யாழ் மண்ணில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மறை பணியாற்றியவர் என்ற ஒரேயொரு காரணத்தைக் கருத்திற்கொண்டு, அருட்தந்தையர்கள் அன்று தமது எதிர்ப்புகளைப் பகிரங்கப்படுத்தாது தவிர்த்துக் கொண்டனர்.
கடந்த பத்தாண்டு கால அவரது பதவிக் கால நிர்வாக முறைமைகள் குறித்துப் பல அருட்தந்தையர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
ஆனால் கத்தோலிக்க திருஅவையின் மரபுவழி ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கும் விதிகளுக்கும் மதிப்பளித்து, அவர்கள் அதனை மிக நாகரிகமான முறையிலேயே சுட்டிக்காட்டியும் வந்துள்ளனர்.
ஒரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஒருவர் பொறுப்பேற்கும் போது, ஓய்வுபெறும் ஆயர் தனது பதவிக்காலத்தின் நிதி நிர்வாக செயற்பாடுகள் அடங்கிய கணக்கறிக்கையை புதிய ஆயரிடம் மாத்திரமே நேரடியாகக் கையளிக்க வேண்டும் என்ற நடைமுறை கத்தோலிக்க திருஅவை விதிகளில் உண்டு.
இத்தகையதொரு பின்புலத்தில், ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தின் பதவிக்காலமானது ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் சார்ந்து முற்றிலும் மௌனம் காக்கப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தமிழினத்தின் தேசிய உரிமைகள் குறித்து எவ்வித ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் முன்வைக்காத ஆயர் ஜஸ்ரின், இலங்கை இராணுவத்தோடு இணக்கமான உறவைப் பேணி, சில தேவாலயங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிகளிலேயே ஆர்வம் காட்டினார்.
இத்தகைய நகர்வுகள், அருட்தந்தையர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழ் கத்தோலிக்க மக்கள் மத்தியிலும் அதிருப்திகளை தோற்றுவித்திருந்தது.
ஆகவே, இந்த நீண்டகால அதிருப்திகளின் தொடர்ச்சியாகவும், கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் அரசியல் நகர்வுகளின் பின்புலத்தோடுமே, கொழும்பிலிருந்து அன்ரன் ரஞ்சித், யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக முன்னிறுத்தப்பட்ட விவகாரத்தில் வெடித்துள்ள எதிர்ப்புகளும் விசனங்களும் தர்க்கரீதியாக உற்று நோக்கப்பட வேண்டியுள்ளன.
ஆயர் அன்ரன் ரஞ்சித் அமைதியான இயல்பைக் கொண்டவர்; சமயப் பணிகளுக்கு அப்பால், ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வுகளில் எவ்வித ஈடுபாடும் அற்றவர்.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் வழிகாட்டுதல்களை அப்படியே ஏற்றுச் செயலாற்றக்கூடிய ஒருவராகவே அவர் அறியப்படுகிறார்.
அத்துடன், ஓய்வுபெற்ற பின்னரும்கூட ஆயர் ஜஸ்ரின் பின்னணியில் இருந்து அன்ரன் ரஞ்சித்தை இயக்கக்கூடிய நிழல் சக்தியாக விளங்குவார் என்ற வாதங்களும் உண்டு.
எனவே, இப்பின்னணிகளின் அடிப்படையிலேயே ஆயர் அன்ரன் ரஞ்சித்தின் இந்த நியமனமானது, ”இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற அதிகாரக் கட்டமைப்பினால் திட்டமிடப்பட்டது என்ற ஆழமான, தர்க்கரீதியான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்தே ஆயர் நியமனம் இறுதி செய்யப்பட்டதாக புதன்கிழமை, யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற புதிய நியமனம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு நிகழ்வில், ஆயர் ஜஸ்ரின் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக, ஆயர் மற்றும் கர்தினால் நியமனங்களை மேற்கொள்வதற்கு அந்தந்த நாடுகளின் அரசியல் தலையீடுகளோ அல்லது அரசாங்கங்களின் அங்கீகாரமோ தேவையற்ற ஒன்றாகும்.
ஆகவே, அரசாங்கத்துடன் கலந்தாய்வு முன்னெடுக்கப்பட்டது என்று ஆயர் ஜஸ்ரின் குறிப்பிட்டதில் இருந்தே, இதன் பின்னால் இருந்த உள்ளக அரசியல் காய் நகர்த்தல் அம்பலமாகியுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவிற்குப் பின்னர், ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரங்கள் குறித்து ஐ நா போன்ற சர்வதேச அரங்குகளில் எந்தவொரு ஆயரும் குரலெழுப்பக் கூடாது என்பதில், சிங்கள அரசியல் தலைவர்களை விடவும், கர்தினால் மல்கம் ரஞ்சித் தீவிரமாக இருக்கிறார் என்பது பட்டவர்த்தனம்.
இறுதிப் போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்குச் சர்வதேச நீதி விசாரணை தேவையற்றது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்த மல்கம் ரஞ்சித், 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளுக்காகச் சர்வதேச நீதியைக் கோரியபோது, அவரின் இரட்டை முகம் பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்தது.
அதேநேரம், ‘சி.எம்.ஆர்.எஸ்’ (CMRS) எனப்படும் பிரதான கத்தோலிக்க துறவற பெரியவர்கள் மாநாடு (Conference of Major Religious Superiors) கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிங்கள அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பெருமளவில் பங்கெடுத்திருந்தனர்.
அங்கு ஆரம்ப உரையாற்றியிருந்த ஆயர் ஜஸ்ரின், “செம்மணி புதைகுழியில் சிங்கள மக்களும் புதைக்கப்பட்டிருக்கின்றனர்; தமிழர்கள் மாத்திரமே புதைக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே, தன் மனச்சாட்சிக்கு மாறாகப் பாரிய பொய்ம்மையை வெளிப்படுத்திய பின்னணியைக் கொண்ட ஆயர் ஜஸ்ரின் மற்றும் அவ்வாறான பொய்களை ஏற்கனவே கட்டவிழ்த்து வரும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆகியோரின், விருப்பத் தெரிவான புதிய ஆயர் அன்ரன் ரஞ்சித், தமிழர் விவகாரத்தில் இந்த இருவரினதும் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
ஆகவே, இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
இரு மாதங்களுக்கு முன்னர், மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் மன்னார் அருட்தந்தையர்கள் குறித்து சமூக வலைத்தளம் ஒன்றில் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் மிக முக்கியமானவை.
அதில் ஒரு கட்டுரை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன் சஞ்சீவி’ ஞாயிறு வார இதழிலும், மற்றைய கட்டுரை சமூக வலைத்தளங்களிலும் செய்தி இணையத் தளங்களிலும் வெளியாகியிருந்தன.
அந்த இரு கட்டுரைகளின் வெளியீட்டிற்குப் பின்னர், அவதூறுகளைப் பரப்பியவர்கள் தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களையே முடக்கிவிட்டனர்.
எனவே, “உண்மை” – “நியாயம்” என்பவற்றை சமரசமின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு “பத்திரிகையாளனின்” சமூகப் பொறுப்புணர்வே, நான் எழுதும் கட்டுரைகள்.
வத்திக்கான் பொதுவாக எந்தவொரு புதிய ஆயரை நியமிப்பதற்கு முன்பும், அவர் அந்த நாட்டின் அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தின் இன, மொழி, அரசியல் சூழலுக்குப் பொருத்தமானவரா, அனைத்து மக்களையும் சமமாக நடத்துவாரா என்பதை மிகத் தீவிரமாக உளவுத்துறை மற்றும் உள்ளூர் ஆலோசனைகள் மூலம் விசாரித்த பின்னரே இறுதி முடிவை வெளியிடுகிறது.
ஏதேனும் தவறான தகவல் காரணமாக நியமனம் செய்யப்பட்டு, பின்னர் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டால், திருஅவையின் ஒற்றுமைக்காக அந்த நியமனத்தை வத்திக்கான் உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
இது பற்றிய நெறிமுறைகள் வத்திகான் நியமன வரலாற்றுப் பதிவுகளில் உண்டு.
கட்டுரையின் நீளம் கருதி அவற்றை சுருக்கமாகத் தருகிறேன்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தாக்பிலாரன் (Tagbilaran) மறைமாவட்டத்தின் ஆயராக 2026 இல் நியமிக்கப்பட்ட அருட்தந்தையான சகோ (Fr. Saco), தனது ஆயர் திருநிலைப்பாட்டுக்கு சில வாரங்களுக்கு முன்னர் “ஆழ்ந்த பரிசுத்த ஆவியின் தேடலின் பின்” இந்த நியமனத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பராகுவே நாட்டின் ஆயர் மாரியோ மெலார்டினோ (Mario Melanio Medina), 2017 ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.
ஆயர் ஜெரார்ட் பௌலார்ட் (Gerard Bouffard) 2002 இல் கனடாவின் ஒரு மறைமாவட்டத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்டார். ஆனால், முறைப்பாடுகள் எழுந்ததால், திருநிலைப்படுத்தப்படுவதற்கு முன்பே தனது நியமனத்தை வாபஸ் பெற்றார்.
இந்தோனேசியாவில், ஆயர் பாஸ்கலிஸ் புருனோ சியுகூர் (Bishop Paskalis Bruno Syukur) 2024 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸினால், ‘கர்தினால்’ (Cardinal) என்ற மிக உயரிய பதவிக்கு நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், மறைமாவட்ட நிர்வாகத்தின் முறைப்பாடுகளினால் அவர் கர்தினாலாக பொறுப்பேற்காமல் வாபஸ் பெற்றார்.
இவ்வாறு பதவியேற்றுப்புக்கு முன்னரே நீக்கப்பட்ட அல்லது தாமாகவே பதவி விலகிய பல உதாரணங்கள் உண்டு.
திருஅவையின் ஒற்றுமை, விசுவாசிகளின் நலன் மற்றும் நீதி ஒழுங்கு முறையைக் காப்பதற்காக, அறிவிக்கப்பட்ட ஆயர் நியமனங்களை வத்திக்கான் இரத்துச் செய்யவும், மாற்றியமைக்கவும் கத்தோலிக்க திருச்சபை முறைமைச் சட்டத்தில் (Canon Law) முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, சர்வதேச அளவிலான இத்தகைய வரலாற்று முன்னுதாரணங்களின் அடிப்படையில், கர்தினால் மல்கம் ரஞ்சித், யாழ் ஆயர் ஜஸ்ரின் ஆகியோரின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து, வத்திக்கானின் உயர் பீடத்திற்கு அருட்தந்தையர்களும் கத்தோலிக்கப் பொதுநிலையினரும் உரிய முறையில் தெளிவுபடுத்துவது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கத்தோலிக்கத் திருஅவையின் புனிதமான ‘முறைமைச் சட்ட’ வழிகாட்டுதல்களுக்கு மாறாக, தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நுட்பமான நகர்வுகள், அதன் நீண்டகாலத் தாக்கங்கள் குறித்து, வத்திக்கானின் கவனத்திற்கு முறைப்படியாகக் கொண்டு செல்ல வேண்டியது தற்போதைய சூழலில் காலத்தின் தேவையாகும்.
குறிப்பு – கர்தினால் – ஆயர் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட ஆங்கிலச் செய்தி இணைப்புகள். பின்னூட்டத்தில் உள்ளன…
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-